இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவராக விக்ரமன் பொறுப்பு வகித்து வந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வடபழனியில் நடந்தது.

Update: 2019-06-10 23:45 GMT
இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, மனோபாலா, ரமேஷ் கண்ணா, பேரரசு, நாஞ்சில் பி.சி.அன்பழகன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆர்.கே.செல்வமணி பேசும்போது தயாரிப்பாளர் சங்கம் பற்றி சர்ச்சை கருத்தை வெளியிட்டார். அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் வருத்தம் தெரிவித்தார். பாரதிராஜா இயக்குனர் சங்கத்தில் பொறுப்பேற்க முன்வரவேண்டும் என்றும் ஆர்.கே.செல்வமணி அழைப்பு விடுத்தார். 

அதன்பிறகு தலைவர் தேர்வு நடந்தது. பாரதிராஜா தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். எதிர்த்து யாரும் நிற்காததால் பாரதிராஜா இயக்குனர் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இயக்குனர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தலைவராக தேர்வான பாரதிராஜா பேசும்போது, ‘‘திரைப்பட துறையில் வலுவான அமைப்பாக திகழும் இயக்குனர் சங்கத்துக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி. எனது சிஷ்யன் பாக்யராஜ் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’’ என்றார்.

மேலும் செய்திகள்