கேரளாவில் மனைவியை தாக்கி கடத்தப்பட்ட கின்னஸ் இயக்குனர் மீட்பு

கேரளாவில் கடத்தப்பட்ட கின்னஸ் இயக்குனர் கொடக்கரா என்ற இடத்தில் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-08-08 22:00 GMT
மலையாள இயக்குனர் நிஷாத் ஹசன். இவர் ‘விப்லவம் ஜெயக்கானுள்ளதானு’ என்ற மலையாள படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். இந்த படத்தை ஒரே ஷாட்டில் 2 மணிநேரத்தில் படமாக்கி கின்னஸ் சாதனை படைத்தார். கடந்த 2-ந் தேதி திரைக்கு வந்தது. படத்தின் தயாரிப்பாளருக்கும், நிஷாத் ஹசனுக்கும் பண விவகாரத்தில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த பேராமங்கலம் பகுதியில் வசித்த நிஷாத் ஹசன் தனது மனைவி பிரதீக்‌ஷாவுடன் காரில் குருவாயூர் கோவிலுக்கு சென்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த ஒரு கார் நிஷாத் ஹசன் சென்ற காருக்கு முன்னால் சென்று வழிமறித்தது. அந்த காரில் இருந்து இறங்கியவர்கள் நிஷாத்தை அடித்து உதைத்து கடுமையாக தாக்கினார்கள்.

தடுக்க முயன்ற பிரதீக்‌ஷாவையும் அடித்து தள்ளினர். பின்னர் நிஷாத்தை இழுத்து சென்று அவர்களது காரில் ஏற்றி கடத்தி சென்றுவிட்டனர். காயம் அடைந்த பிரதீக்‌ஷா பேராமங்கலம் போலீசில் புகார் செய்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷாத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் நேற்று காலை கொடக்கரா என்ற இடத்தில் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் எதற்காக கடத்தப்பட்டார் என்று விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்