தடைகளை தாண்டி ‘பிகில்’ ரிலீஸ்: விஜய் படங்களுக்கு தொடரும் சர்ச்சைகள்

விஜய் படங்களுக்கு தொடரும் சர்ச்சைகள். "பிகில்" திரைப்படத்திற்கு இன்று ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Update: 2019-10-24 23:53 GMT
விஜய் படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் எதிர்ப்புகளை சந்திப்பது வழக்கமாகி விட்டது. 2012-ல் திரைக்கு வந்த துப்பாக்கி படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை தவறாக சித்தரித்து இருந்ததாக சர்ச்சை கிளம்பியது. 2013-ல் வெளியான தலைவா படத்தில் கதை சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டது.

அந்த படத்தில் இடம் பெற்ற ‘டைம் டூ லீடு’ என்ற வாசகத்துக்கும் பிரச்சினை கிளம்பியது. 2014-ல் வெளியான கத்தி திரைப்படத்தை இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் தயாரித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின. படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று போராட்டங்களும் நடந்தன. கதை திருட்டு வழக்கும் தொடரப்பட்டது.

2017-ல் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வரிக்கு எதிரான வசனம் இருந்ததால் பிரச்சினையில் சிக்கியது. 2018-ம் ஆண்டு வெளியான சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை கேலி செய்யும் காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பின. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யவும் முயற்சிகள் நடந்தது.

பின்னர் சர்ச்சை காட்சிகளை நீக்கி விட்டு படத்தை திரைக்கு கொண்டு வந்தனர். இப்போது பிகில் படமும் கதை திருட்டு வழக்கில் சிக்கி உள்ளது. சிறப்பு காட்சிகளுக்கும் அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், “பூ விற்பவரை பட்டாசு விற்கும் வேலையில் அமர்த்தினால் ஏற்படும் சங்கடங்களை உதாரணமாக சொல்லி பொறுப்பில் யாரை உட்கார வைக்க வேண்டும் என்று விஜய் பேசி இருந்தார். பேனர் கலாசாரத்தையும் விமர்சித்தார். தடைகளை தாண்டி பிகில் இன்று திரைக்கு வருகிறது.

விஜய்யின் முந்தைய சந்திரலேகா, பிரியமானவளே, ஷாஜகான், பகவதி, திருமலை, சிவகாசி, அழகிய தமிழ் மகன், வேலாயுதம், துப்பாக்கி, கத்தி, மெர்சல், சர்கார் ஆகிய படங்களும் தீபாவளிக்கே திரைக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிகில் திரைப்படத்திற்கு இன்று ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்திப்புக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவிக்கையில், “விடுமுறை தினங்களில் ஏற்கனவே சிறப்புக்காட்சிக்கு அனுமதி உள்ளது. இதனால் பிகில் திரைப்படத்திற்கு இன்று ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறப்புக்காட்சிக்கு அரசு அனுமதித்த கட்டணத்தையே வாங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்புக்காட்சிக்கான நிபந்தனைகளை பின்பற்றுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்ததால் இன்று ஒருநாள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகவுள்ள பிகில் பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி தந்த முதல்வர், தமிழக அரசுக்கு நன்றி என ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்