வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: நடிகை ராஷ்மிகா நேரில் ஆஜராக உத்தரவு

வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக நடிகை ராஷ்மிகா வீட்டில் நடந்த சோதனையைத்தொடர்ந்து விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Update: 2020-01-18 00:54 GMT
குடகு,

தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள குக்குலூரு கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் அதிரடியாக சென்று சோதனை நடத்தினார்கள். சோதனையின்போது நடிகை ராஷ்மிகா படப்பிடிப்புக்காக சென்னை சென்று இருந்தார்.

இந்த சோதனை நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதிகாரிகள் ராஷ்மிகாவின் குடும்பத்தினரிடம் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

இதேபோல் நடிகை ராஷ்மிகாவுக்கு சொந்தமான ஒரு திருமண மண்டபத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். நடிகை ராஷ்மிகாவுக்கு வீடு, திருமண மண்டபம் தவிர சொந்தமாக விளம்பர நிறுவனமும், பல்வேறு தொழில் நிறுவனங்களில் பங்குகளும் உள்ளதாக தெரிகிறது.

மேலும் ராஷ்மிகாவின் தந்தை மதன் மஞ்சண்ணா, தாய் சுமன் ஆகியோரின் பெயர்களிலும் கடந்த ஒரு வருடத்திற்குள் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பதிவாகி உள்ளன. சொத்து ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். முன்னதாக இதுதொடர்பான விசாரணைக்கு பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ராஷ்மிகாவும், அவருடைய பெற்றோரும் விரைவில் வந்து ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்