5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து சூர்யா, தனுஷ் வரவேற்பு

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அரசு ரத்து செய்ததை நடிகர்கள் சூர்யா, தனுஷ், விவேக் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

Update: 2020-02-05 23:00 GMT
5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்களும், கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுத்தேர்வு நடத்துவதால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கண்டித்தனர். எதிர்ப்பு காரணமாக பொதுத்தேர்வை அரசு ரத்து செய்துள்ளது.

இதனை நடிகர்கள் சூர்யா, தனுஷ், விவேக் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், “படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானது என்று அகரம் தனது களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது. 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள்” என்று கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், “5-ம் மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது. இது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தில் இருந்தும் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியையும், சமூகத்திற்கு சமத்துவ ஆரோக்கியத்தையும் நிலைபெறச்செய்யும், வாழ்த்துகள். நன்றி” என்று கூறியுள்ளார்.

நடிகர் விவேக், “பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு 5, 8-ம் வகுப்பின் பொதுத்தேர்வை ரத்து செய்ததற்கு நன்றி. தஞ்சை பெரிய கோவிலுக்கு குடமுழுக்கு. குழந்தைகளின் பொதுத்தேர்வுக்கு தலைமுழுக்கு” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்