தணிக்கையில் நீக்கப்பட்ட ஜீவாவின் ‘ஜிப்ஸி’ காட்சிகள் வெளியானது

குக்கூ, ஜோக்கர் படங்களை எடுத்து பிரபலமான ராஜூமுருகன் இயக்கிய ‘ஜிப்ஸி’ படத்தில் ஜீவா நடித்துள்ளார்.

Update: 2020-03-04 23:30 GMT
நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன்பே முடித்து தணிக்கைக்கு அனுப்பினர்.

படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபித்து சான்றிதழ் அளிக்க மறுத்தனர். அந்த காட்சிகளை நீக்க படக்குழுவினர் சம்மதிக்கவில்லை. நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் “ஜிப்ஸி திரைப்படத்தில் என்ன பிரச்சினை? இரு முறை தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டு டிரிபியூனல் செல்ல அறிவுறுத்தப்பட்டதா? ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை கேவலப்படுத்தும் காட்சிகளும், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கெட்டப்போட்டு, அவர் பெயரை பயன்படுத்தியதும், இந்து கலவர காட்சிகளும் காரணமா?” என்று பதிவிட்டது பரபரப்பானது.

தணிக்கை தீர்ப்பாயத்தில் சில சர்ச்சை காட்சிகளை நீக்கிவிட்டு ‘ஏ’ சான்றிதழ் அளித்தனர். ஆனாலும் படம் திட்டமிட்டபடி வெளியாகாமல் தாமதமானது. தடைகளை கடந்து நாளை படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தணிக்கையில் நீக்கப்பட்ட 3 நிமிட காட்சிகளை வீடியோவாக ஜிப்ஸி படக்குழுவினர் யூ டியூப்பில் வெளியிட்டுள்ளனர்.

அதில் ஆதார் அட்டை, மாவோயிஸ்டுகள், நீதிமன்றம், போலீஸ் பற்றிய சர்ச்சை வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகள் ஜிப்ஸி திரைப்படத்தில் இடம்பெறாது என்றும் அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்