ஊரடங்கு எனக்கு புதிது இல்லை - சோனாலி பிந்த்ரே

ஊரடங்கு எனக்கு புதிது இல்லை என சோனாலி பிந்த்ரே கூறியுள்ளார்.

Update: 2020-05-01 04:49 GMT
சென்னை,

தமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தும், பம்பாய் படத்தில் ‘அந்த அரபிக்கடலோரம்’ பாடலுக்கு நடனம் ஆடியும் பிரபலமான முன்னணி இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே, கொரோனா ஊரடங்கு பற்றி கூறியதாவது:-

ஊரடங்கு மாதிரியான நிலைமைகள் எனக்கு புதிது இல்லை. புற்றுநோயோடு இரண்டு ஆண்டுகள் போராடி, இப்போது குணமடைந்து ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்கிறேன். எனக்குள் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ந்து இருக்கிறது. காய்கறி, பழங்கள் அதிகம் சாப்பிடுகிறேன்.

புற்றுநோய் சிகிச்சை எடுக்கும்போதே இரண்டு ஆண்டுகள் தனிமைப்படுத்தப்படும் நிலமையை அனுபவித்து விட்டேன். இப்போது கொரோனா தடுப்புக்காக அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு இருக்கிறோம். ஏற்கனவே அனுபவித்து விட்டதால் இது எனக்கு கஷ்டமாக தெரியவில்லை.

அப்போதைய தனிமைப்படுத்தலில் நண்பர்கள், உறவினர்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரிக்க வருவார்கள். இப்போது அதுகூட இல்லை. போனில்தான் விசாரிக்கிறார்கள். நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு இல்லை. கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த மாதிரியான துர்பாக்கிய நிலைமை எப்போதும் வரக்கூடாது என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு சோனாலி பிந்த்ரே கூறினார்.

மேலும் செய்திகள்