நடிகர் சோனு சூட்டுக்கு 11 ஆயிரம் அஞ்சல் அட்டைகள்: கொரோனா காலத்தில் உதவியதற்கு நன்றி தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு

இடம் பெயர்ந்த தொழிலாளர்களை கேரளாவில் இருந்து ஒடிசாவுக்கு தனி விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவித்து 11 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் அனுப்பப்படுகின்றன.

Update: 2020-06-11 23:46 GMT
புவனேசுவரம்,

பிரபல இந்தி நடிகர் சோனு சூட். இவர், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக ஊரடங்கு போடப்பட்ட நிலையில், பிற மாநிலங்களில் தவித்து வந்த இடம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து மகத்தான சேவை செய்து, நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறார்.

அந்த வகையில் இவர் கடந்த மாதம் கேரளாவில் ஜவுளி ஆலையில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 147 பெண்கள், 20 ஆண்கள் என 167 இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு போக இயலாமல் தவித்துக்கொண்டிருப்பதை டுவிட்டர் மூலம் தெரிந்து கொண்டார்.

அவர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார்.

அவர் ஏர் ஏசியா விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு ஒரு தனி விமானத்தை ஏற்பாடு செய்து அவர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்.

இதையடுத்து தங்களுக்கு உதவி செய்த நடிகர் சோனு சூட்டுக்கு தொழிலாளர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

இந்த நிலையில், தங்கள் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கேரளாவில் தவித்த போது, உதவிக்கரம் நீட்டி விமானத்தில் அனுப்பி வைத்த சோனு சூட்டின் தாராள மனம், கேந்திரப்பாரா மாவட்டத்தில் உள்ள நவ்ஜவான் யூனியன் என்ற தொண்டு நிறுவனத்தை பெரிதும் கவர்ந்தது.

இதற்காக 11 ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பி அதன் மூலம் நடிகர் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவிக்க அந்த அமைப்பினர் ஏற்பாடு செய்தனர்.

இதை அந்த மாவட்ட கலெக்டர் சமர்த் வர்மா நேற்று தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்