படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம்... 2 வாரங்கள் ஓய்வெடுக்க நடிகர் சூர்யா முடிவு..!

நடிகர் சூர்யாவுக்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.;

Update:2023-11-26 16:41 IST

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, கடந்த 23ம் தேதி சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் 'கங்குவா' படத்தின் சண்டைக்காட்சி தொடர்பான படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, 10 அடிக்கு மேல் இருந்த ரோப் கேமரா அறுந்து நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்ததாகவும் இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள், சூர்யா விரைவில் குணமடைய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதற்கிடையே தனது உடல்நிலை சற்று முன்னேறி உள்ளதாக நடிகர் சூர்யா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி 2 வாரங்கள் வீட்டில் தங்கி ஓய்வெடுக்க நடிகர் சூர்யா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நாட்களில் கங்குவா படத்தில் சூர்யா இடம்பெறாத காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்