சினிமா துளிகள்
தந்தைக்கு மகன் கொடுத்த பரிசு

பாலிவுட்டின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவர் வருண் தவான். இவர் இந்தியின் முன்னணி இயக்குனராக வலம் வரும் டேவின் தவானின் மகன் ஆவார்.
கல்லூரி படிப்பை முடித்ததும் தந்தையைப் போலவே இயக்குனராக வேண்டும் என்று ஆசைப்பட்ட வருண், அதற்காக பல வெற்றிப்படங்களை இயக்கியவரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். அவரோடு சேர்ந்து ஷாருக்கான் -கஜோல் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான ‘மை நேம் இஸ் கான்’ என்ற படத்தில் பணியாற்றினார்.

இந்த நிலையில் கரண் ஜோகர் அடுத்து இயக்கிய ‘ஸ்டூடண்ட் ஆப் தி இயர்’ என்ற படத்தில் தன்னிடம் பணியாற்றிய வருண் தவானை நடிகராக மாற்றினார். இதில் சித்தார்த் மல்கோத்ரா, அலியாபட் ஆகியோருடன் இணைந்து நடித்தார் வருண் தவான். இதையடுத்து வருணின் திரையுலகப் பயணம் இயக்குனர் என்ற திசையில் இருந்து நடிப்பு திசைக்கு மாறியது. தொடர்ந்து 10 படங்கள் நடித்து விட்ட வருண் தவான், தற்போது ‘சுய் தாகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘ஊசி நூல்’ என்று பொருள் கொள்ளக் கூடிய இந்தப் படம், கைத்தறி ஆடைகள் பற்றி பேசுகிறதாம். இதில் வருண் தவான், டெய்லர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா சர்மா நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஷயம் என்னவென்றால், ‘சுய் தாகா’ படத்தில் நடித்ததன் மூலம் கைத்தறி ஆடைகளின் மீது வருணுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அது சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய, அவரது தந்தையின் பிறந்த நாள் விழாவில் வெளிப்பட்டிருக்கிறது. அந்த விழாவில் தன்னுடைய தந்தை டேவிட் தவானுக்கு, தன்னுடைய கையாலேயே தைத்த கைத்தறி சட்டை ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார் வருண்.