மீண்டும் இயக்குனரான தம்பி ராமையா

சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'ராஜா கிளி'. இப்படத்தை நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட தம்பி ராமையா இயக்குகிறார்.

Update: 2022-08-05 16:45 GMT

'மாநாடு', 'கங்காரு', 'மிகமிக அவசரம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படம் 'ராஜா கிளி'. இப்படத்தை நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட தம்பி ராமையா இயக்குகிறார். 'சாட்டை', 'அப்பா', 'வினோதய சித்தம்' ஆகிய படங்களை தொடர்ந்து சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் இந்தப்படம் உருவாகிறது.

இப்படத்தின் கதையின் நாயகனாக சமுத்திரக்கனியும், கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின்.ஜி, இயக்குனர் மூர்த்தி, 'கும்கி' அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், 'கும்கி' தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக கோபிநாத், இசையமைப்பாளராக தமனிடம் சீடராக பணியாற்றிய தினேஷ், படத்தொகுப்பாளராக ஆர். சுதர்சன் பணியாற்றுகின்றனர். இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி இணை இயக்குனராகப் பணியாற்றுகிறார். இந்தப் படத்தின் பூஜை இன்று மிக எளிய முறையில் நடைபெற்றது.

இப்படம் குறித்து இயக்குனர் தம்பி ராமையா கூறியது, "இந்தப் படத்தை வி ஹவுஸ் நிறுவனத்தில் நான் இயக்குவதற்கு காரணமே, சுரேஷ் காமட்சி வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல ஒரு மிகச்சிறந்த இயக்குனரும் கூட. சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் கதை அறிவு கொண்ட தயாரிப்பாளர்களாக இருக்கும் வெகு சிலரில் சுரேஷ் காமாட்சியும் ஒருவர்.

கிட்டத்தட்ட 12 இயக்குனர்களிடம் இந்தக் கதையை கூறிவிட்டு, அதன் பின்னர் இந்த படத்தை தயாரிக்கிறார் சுரேஷ் காமாட்சி. பெருந்திணைக் காதலை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படம் ஒரு வாழ்வியல் கதை என்பதால், ஒரு மனிதனின் சுயசரிதை என்பதால் இதை நானே இயக்குவது தான் சரியாக இருக்கும் என மீண்டும் டைரக்சனில் இறங்கியுள்ளேன்.

இந்த கதையில் நிகழ்வதெல்லாம் சாத்தியமா என்றால், இது நிஜத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி தான் உருவாகிறது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு மனிதனின் வாழ்க்கையை பார்த்துவிட்டு வெளியே வந்த உணர்வு ஏற்படும். எல்லா தரப்பு வயதினருக்குமான கதாபாத்திரங்கள் இந்த படத்தில் சுழன்று கொண்டே இருக்கும். படம் பார்ப்பவர்கள் இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் தங்களை தொடர்புபடுத்தி பார்த்துக்கொள்ள முடியும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்