100 சதவீதம் வாக்களிப்பது குறித்து சிறப்பு அஞ்சல் அட்டை மூலம் விழிப்புணர்வு

100 சதவீதம் வாக்களிப்பது குறித்து சிறப்பு அஞ்சல் அட்டை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2019-03-31 23:00 GMT
அரியலூர்,

இந்திய தேர்தல் ஆணையம் வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019 முன்னிட்டு தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து, அரியலூர் நகராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து சிறப்பு அஞ்சல் அட்டைகளை பொதுமக்களுக்கு வீட்டுக்கே சென்று தபால் பணியாளர்கள் மூலம் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி தொடங்கி வைத்தார்.

மேலும், நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி தேர்தல் ஆணையம், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் மேற்கொண்டு வருகிறது. இதில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் வாக்களிப்பது குறித்து கிராமங்களில் தேர்தல் சம்மந்தமான குறும்படங்கள் காண்பிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, 18 வயது நிரம்பிய வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் மூலம் நூதன பிரசுரங்களும் செய்யப்படுகின்றன. தற்போது, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி சிறப்பு அஞ்சல் அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்து, விவரம் இடம் பெற்றுள்ளது. இந்த அஞ்சல் அட்டைகளை அஞ்சல் துறையின் தபால் பணியாளர்கள் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கும் வழங்க உள்ளனர். குறிப்பாக மக்களை அவர்களது வசிக்கும் இடங்களுக்கு தேடிச்சென்று வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு சிறப்பு அஞ்சல் அட்டைகளை அரியலூர் நகராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் ஒவ்வொருவரும் தேர்தலின் மாண்பை அறிந்து, 100 சதவீதம் பங்கேற்று வாக்களிக்க முன்வரவேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் கதிரவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, துணை அஞ்சலக அலுவலர் டோம்னிக்ராஜ், தபால்காரர்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்