கரும்பு நடவு பணிகள் தீவிரம் பகல் முழுவதும் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

அய்யம்பேட்டை பகுதியில் கரும்பு நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பகல் முழுவதும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2019-04-09 22:45 GMT
அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அச்சு வெல்லம் தயாரிப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்புத்தாண்டுக்கு முன்பாக கரும்பு நடவு தொடங்கும். வழக்கம்போல் இந்த ஆண்டும் அய்யம்பேட்டை, மாகாளிபுரம், கணபதி அக்ரகாரம், புதுத்தெரு, வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், பட்டுக்குடி, உள்ளிக்கடை உள்ளிட்ட கிராமங்களில் கரும்பு நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மும்முனை மின்சாரத்தை பகல் முழுவதும் வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து பட்டுக்குடி கிராமத்தை சேர்ந்த கரும்பு விவசாயி சண்முகம் கூறியதாவது:-

சிரமங்களுக்கு இடையே...

உரம்-டீசல் விலை உயர்வு, கூலியாட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு இடையே ஒவ்வொரு ஆண்டும் கரும்பு சாகுபடி செய்து வருகிறோம். தற்போது கரும்பு நடவு செய்தால் தான் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அறுவடை செய்து அச்சு வெல்லம் தயாரிக்க முடியும்.

தற்போது இந்த பகுதியில் பகலில் 6 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கிடைக்கிறது. கரும்பு நடவின் போது பகல் முழுவதும் மும்முனை மின்சாரம் கிடைத்தால் தான் தேவையான அளவு தண்ணீரை பாய்ச்சி நடவு பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள முடியும்.

மும்முனை மின்சாரம்

இந்த நிலையில் 6 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதால் கரும்பு நடவு பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. எனவே பகல் முழுவதும் மும்முனை மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தற்போது வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு பயிர்களுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்கச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்