வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா; ரூ.59 ஆயிரம் பறிமுதல் அ.தி.மு.க. பிரமுகரிடம் அதிகாரிகள் விசாரணை

நாகையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் இருந்து ரூ.59 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-04-14 22:15 GMT
நாகப்பட்டினம்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது.

நாகை மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கவும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பறக்கும்படை அதிகாரிகள் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

நாகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பறக்கும் படையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

வாகன சோதனையின்போது உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று உதவி தோட்டக்கலை அதிகாரி சுரேஷ் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நாகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது நாகை செக்கடி தெருவில் வீடு, வீடாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பறக்கும் படையினர் அங்கு சென்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த செக்கடி தெருவை சேர்ந்த சிங்காரவேலு (வயது57) என்பவரிடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் அ.தி.மு.க. 36-வது வார்டு செயலாளர் என்பதும், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.

மேலும் அவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.59 ஆயிரத்து 50-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாக்காளர் பெயர் விவரங்கள் அடங்கிய பட்டியலையும் அவரிடம் இருந்து அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் நாகை தேர்தல் துணை தாசில்தார் நீலாயதாட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அ.தி.மு.க. பிரமுகரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்