கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதார், வாக்காளர் அட்டைகளை மனுக்கள் பெட்டியில் போட்ட டிரைவர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் போட்ட டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-15 23:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு ஷெரீப் காலனியை சேர்ந்த நேசமணி என்பவர் மனு கொடுக்க வந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

திருப்பூர் ஷெரீப் காலனியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்துக்கு சொந்தமான பகுதியில் உள்ள வீட்டில் சுமார் 3 ஆண்டுகளாக எனது மனைவியும், நானும் வசித்து வருகிறோம். நான் டிரைவர் வேலை செய்து வருகிறேன். மன்ற தலைவர் கிருஷ்ணசாமி அவினாசியில் இருக்கும் அவரது மகள் வீட்டிற்கு கார் டிரைவராக வேலைக்கு செல்லுமாறு என்னை அனுப்பினார்.

இதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் மன்றத்து வீட்டை காலி செய்ய வேண்டும். மேலும், அதிகமாக வீட்டு வாடகை கொடுக்க வேண்டும் என கொலை மிரட்டல் விடுத்தார். இதுபோல் மன்றத்தின் துணைத்தலைவர் ஞானவேல் வீட்டு வேலையை செய்வதற்கு எனது மனைவியை வற்புறுத்தினார். இதனால் துணைத்தலைவரும் வீட்டை காலிசெய்யுமாறு மிரட்டினார்.

இந்நிலையில் இருவரும் சேர்ந்து எங்களிடம் சில மாதங்களாக வாடகை வாங்காமல் இருந்து விட்டு நாங்கள் குடியிருக்கும் வீட்டின் மின் இணைப்பை துண்டித்துவிட்டனர். மேலும், குடிநீர் குழாய்களையும் உடைத்து விட்டு வீட்டையும் பூட்டிவிட்டனர். இதனால் நாங்கள் கோவில் பிரகாரத்தில் தங்கி வருகிறோம்.

எனவே எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் எங்களை மன்ற வீட்டில் எந்த வித தொந்தரவும் இன்றி வசிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தெற்கு போலீசாருக்கும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

முன்னதாக மனு கொடுக்க வந்த நேசமணி கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள மனுக்கள் பெட்டியில் அவரது மற்றும் அவருடைய மனைவி ஆகியோரின் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள், ரே‌ஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை போட்டார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்