திருவண்ணாமலை நகராட்சியில் குப்பைகளை தரம்பிரித்து வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை - ஆணையாளர் அறிவிப்பு

திருவண்ணாமலை நகராட்சியில் குப்பைகளை தரம்பிரித்து வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Update: 2019-04-30 22:48 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நகராட்சி தற்போது செயல்பாட்டில் உள்ள திடக்கழிவு மேலாண்மை 2016-ன் படி தங்கள் நிறுவனத்தில் சேகரிக்கும் குப்பை கழிவுகளை மக்கும், மக்காத மற்றும் அபாயகரமான கழிவுகள் என தரம் பிரித்து வழங்க வேண்டும். இதைத் தவிர்த்து இனி வரும் காலங்களில் நகராட்சி குப்பை தொட்டிகளில் நேரடியாக தங்கள் நிறுவன குப்பை கழிவுகளை சேர்ப்பது என்பது தடை செய்யப்பட்டதாகும்.

எனவே இந்த தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் தங்கள் நிறுவன குப்பை கழிவுகளில் மக்கும் குப்பைக்கு பச்சை நிற குப்பைத் தொட்டி, மக்காத குப்பைக்கு நீல நிற குப்பைத் தொட்டி மற்றும் அபாயகரமான கழிவுகளுக்கு கருப்பு நிற தொட்டி என குப்பைகளை பிரித்து வைத்திருந்து நகராட்சி வாகனம் வரும் பொழுது தங்கள் சொந்த பொறுப்பில் சேர்த்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது.

தவறும் பட்சத்தில் திருவண்ணாமலை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு திடக்கழிவு மேலாண்மை துறை விதிகள் 2016-ன்படி உடனடி அபராதம், நாள்தோறுமான அபராதம் விதிக்கப்படும். மேலும் தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அபாயகரமானதும், அருவருக்கத்தக்க இனங்களுக்காகவும் வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறுத்திட நீதிமன்ற வழக்கு தொடரப்படும். இந்த தகவலை திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் சுரேந்திரன் (பொறுப்பு) தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்