கீழக்கரையில் வாட்ஸ் ஆப் மூலம் இயங்கிய தீவிரவாத கும்பல்; தேசிய புலனாய்வு அமைப்பிற்கு வழக்கு மாற்றம் - அதிகாரிகள் குழுவினர் நேரில் வந்து விசாரணை

கீழக்கரையில் வாட்ஸ் ஆப் மூலம் இயங்கிய தீவிரவாத கும்பலை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளதால் அதிகாரிகள் குழுவினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Update: 2019-04-30 22:50 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரகசிய கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வந்த தீவிரவாத கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். வீரமரணம் எங்கள் இலக்கு என்ற கொள்கையுடன் வாட்ஸ் அப் குழு அமைத்து செயல்பட்டு வந்த இந்த கும்பலின் தலைவனான தேவிபட்டினம் மேல பள்ளிவாசல் அன்புபகுர்தீன் மகன் சேக்தாவூது(வயது 32) தலைமையில் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்த முகமது பக்கீர் மகன் முகமது ரிபாஸ்(37), தேவிபட்டினம் சின்னபள்ளிவாசல் தெருவை சேர்ந்த உசேன் முபாரக் மகன் முபாரிஸ் அகமது(27), திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை செய்யது ரபீக் மகன் ரிஸ்வான் முகமது(24), சஜித் அகமது(25), தேவிபட்டினம் பஸ்நிலைய தெரு ஜாகிர் உசேன் மகன் அபுபக்கர் சித்திக்(21), சேலம் அம்மாபேட்டை இதயத்துல்லா மகன் லியாக்கத் அலி(26) உள்பட 10 பேர் மீது கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதன்பின்னர் இவர்களில் சிலர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் அதிலிருந்து விடுதலையாகி வெளியில் வந்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை குறித்த விவரங்கள் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த வழக்கின் தீவிரத்தை உணர்ந்து காவல்துறையின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த புலனாய்வு அமைப்பின் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட குழுவினர் ராமநாதபுரம் வந்து வழக்கு குறித்த அனைத்து விவரங்களையும் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பெற்றுக்கொண்டனர். இந்த விவரங்களின் அடிப்படையில் தற்போது புலனாய்வு அமைப்பின் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஒரு குழுவினர் ராமநாதபுரம் வந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கண்ட வாட்ஸ் ஆப் கும்பல் குறித்த விவரங்களின் அடிப்படையில் அவர்கள் கூட்டம் நடத்திய விவரங்கள், சென்று வந்த இடங்கள், குழுவினரின் பின்னணி, சந்தித்த நபர்கள், சாட்சிகள், சமூக வலைதளங்களில் வந்த தகவல்கள் குறித்து பல கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் மேலும் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த தகவல்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்