சூலூர் சட்டமன்ற தொகுதியில், வீதி, வீதியாக சென்று மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டினார் - திண்ணையில் அமர்ந்து குறை கேட்டார்

சூலூர் சட்டமன்ற தொகுதியில் வீதி, வீதியாக சென்று மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்.வீட்டு திண்ணையில் அமர்ந்து குறை கேட்டார்.

Update: 2019-05-06 23:30 GMT
கோவை,

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் சட்டமன்ற தொகுதியில் வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக் கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று காலை 8 மணியளவில் மீண்டும் தனது பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து வேன் மூலம் சூலூர் அருகே உள்ள கலங்கல் பகுதிக்கு சென்றார். அங்கு வேனை விட்டு இறங்கிய அவர் நடந்து சென்று பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரித்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான இளைஞர்கள், பெண்கள், முதியோர் என அனைவரும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பெண்கள் பலர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவருடன் கை குலுக்கியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த தெய்வாத்தாள் என்ற மூதாட்டி அவருக்கு காபி கொடுத்தார். அந்த காபியை வாங்கி குடித்த மு.க.ஸ்டாலின், அந்த மூதாட்டியின் வீட்டு திண்ணையில் அமர்ந்து பிரசாரம் செய்ததுடன், அங்கு திரண்டு இருந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அங்கிருந்து அண்ணாநகர் பகுதிக்கு சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சாலையின் இருபுறத்திலும் திரளாக நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். சிலர் அவருடன் சேர்ந்து ஆர்வத்துடன் செல்போன் மூலம் செல்பி எடுத்துக்கொண்டனர். சில முதியவர் கள் அவருடன் குரூப் போட்டோவும் எடுத்தனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த மணிகுமார்-பிரியதர்ஷினி என்ற தம்பதி தனது ஆண் குழந்தைக்கு பெயர் வைக்கும்படி கூறினார்கள். அந்த குழந்தையை வாங்கிய மு.க.ஸ்டாலின், அந்த குழந்தைக்கு கதிரவன் என்று பெயர் சூட்டினார். பின்னர் அவர் அங்கிருந்து வேன் மூலம் பட்டணம் புதூருக்கு சென்றார். அங்கு வேனைவிட்டு இறங்கி வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது மூதாட்டி ஒருவர், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை கொன்றுவிட்டனர் என்று கூறினார். அதற்கு பதில் கூறிய மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா தமிழகத்தை சேர்ந்த அனைவருக்கும்தான் முதல்-அமைச்சராக இருந்தார். அவரை யாரும் கொலை செய்யவில்லை. அவருடைய சாவில் மர்மம் உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், தீவிர விசாரணை செய்து ஜெயலலிதா சாவில் உள்ள மர்மத்துக்கு தீர்வு காணப்படும் என்றார்.

பிறகு அங்கு பிரசாரத்தை முடித்துக்கொண்ட மு.க.ஸ்டாலின் கோவை திரும்பினார். 

மேலும் செய்திகள்