போலீஸ் போல் நடித்து நூதன முறையில் ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த மர்ம நபர்கள் யார்? போலீசார் தீவிர விசாரணை

பெருந்துறை அருகே போலீஸ் போல் நடித்து நூதன முறையில் ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த மர்ம நபர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-05-14 22:00 GMT

பெருந்துறை,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கூத்தனாங்கடி என்ற ஊரைச் சேர்ந்தவர் அன்வர்சதாஸ் (வயது 38). இவர் கேரளாவில் ஒரு ரெக்சின் நிறுவனமும், கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஒரு நிறுவனமும் வைத்து நடத்தி வருகிறார்.

தன்னுடைய தொழிலுக்கு உதவியாக மலப்புரத்தை சேர்ந்த சிகாபி (30), முனிர் (33), நிஷாத் (27) ஆகிய 3 பேரையும் வைத்துள்ளார். அன்வர்சதாசுக்கு இவர்கள் கார் டிரைவர்களாகவும் வேலை பார்த்தனர். மேலும் நிறுவனத்துக்கான கொடுக்கல்–வாங்கலையும் இவர்களிடம் அவ்வப்போது அன்வர்சதாஸ் ஒப்படைப்பார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 4–ந் தேதி அன்வர்சதாஸ் சென்னை பாரிமுனையில் வைத்து சிகாபி, நிஷாத், முனிர் ஆகியோரிடம் ரூ.30 லட்சத்தை கொடுத்தார். அந்த பணத்தை கேரளாவில் இருக்கும் தன்னுடைய நிறுவனத்தில் ஒப்படைக்குமாறு தனக்கு சொந்தமான காரில் 3 பேரையும் அனுப்பிவைத்தார். பணத்தை வாங்கி காரில் வைத்துக்கொண்டு 3 பேரும் கேரளா நோக்கி சென்றார்கள்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகே பல்லகவுண்டன்பாளையத்தில் அவர்கள் சென்றபோது திடீரென 2 கார்கள் இவர்கள் சென்ற காரை மறித்தது.

2 கார்களில் இருந்தும் சீருடை அணிந்த போலீசார் 4 பேர் இறங்கினார்கள். பின்னர் அவர்கள் தங்களுடைய பறக்கும் படை போலீசார் என்று கூறி காரில் இருந்த ரூ.30 லட்சத்தை எடுத்துக்கொண்டனர். இதற்கான ஆவணங்கள் எங்கே? ஓட்டுக்கு பணம் கொடுக்க கொண்டு செல்கிறீர்களா? என்று 3 பேரிடமும் கேட்டனர். ஆவணங்கள் இல்லை என்று கூறியதும் 3 பேரையும் கைது செய்து, விலங்கு மாட்டி தாங்கள் வந்த காரில் ஏற்றினர்.

அதைத்தொடர்ந்து பணம் கொண்டு வந்த காரை ஒருவர் ஓட்ட, 3 கார்களும் ஈரோடு மாவட்டத்தை விட்டு திருப்பூர் மாவட்ட எல்லைக்குள் நுழைந்தது. அப்போது சிகாபி, முனிர், நிஷாத் ஆகிய 3 பேரையும் போலீசார் ஒரு கிலோ மீட்டருக்கு ஒருவராக தனித்தனியாக இறக்கிவிட்டனர். பணம் கொண்டு வந்த காரை வேறு ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு தாங்கள் வந்த காரில் பணத்துடன் தப்பிச்சென்றனர்.

தனித்தனியாக இறக்கப்பட்ட 3 பேரும் நடந்து வந்து ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்தனர். அப்போதுதான் வந்தவர்கள் போலீஸ் அல்ல. வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. உடனே இதுகுறித்து அன்வர்சதாசிடம் தெரிவித்தார்கள்.

அதன்பின்னர் இதுகுறித்து பெருந்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து ரூ.30 லட்சத்தை நூதன முறையில் வழிப்பறி செய்துவிட்டு சென்ற மர்மநபர்கள் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்