மராட்டியத்தில் 26 அணைகள் முற்றிலும் வறண்டன குடிநீருக்கு மக்கள் பரிதவிப்பு

மராட்டியத்தில் 26 அணைகள் சொட்டு நீரின்றி முற்றிலுமாக வறண்டுபோனதால் குடிநீருக்காக பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.

Update: 2019-05-18 23:30 GMT
மும்பை,

மராட்டியத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாநிலத்தில் உள்ள 151 தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மேலும் இந்த பகுதிகளில் பல்வேறு நிவாரண பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால் குடிநீர் வழங்கும் அணைகள் தொடர்ந்து வற்றி வருவதால் நிலைமை நாளுக்குநாள் மோசமாகி வருகிறது. மக்கள் குடிநீருக்காக திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றுடன் மாநிலத்தில் உள்ள 26 அணைகள் முற்றிலும் வறண்டுபோனதாக நீர் பாதுகாப்பு துறை தனது இணையதளத்தில் தகவல் வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதன்படி அவுரங்காபாத் மண்டலத்தில் உள்ள பைதான், மஞ்சாரா, மஜல்காவ், யல்தாரி, சிதேஷ்வார், கீழ் தார்ணா உள்ளிட்ட முக்கிய அணைகளும் சொட்டு நீரின்றி முற்றிலுமாக வறண்டுபோயுள்ளது.

இதிலும் கீழ் தார்ணா அணையில் கடந்த ஆண்டு இதே சமயத்தில் சுமார் 52.03 சதவீதம் தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அவுரங்காபாத் மண்டலத்தில் உள்ள அணைகளில் தற்போது 0.43 சதவீதம் மட்டுமே நீரிருப்பு இருப்பது கவலையளிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டு இதே சமயத்தில் 23.44 சதவீத நீரிருப்பு இருந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர் சஞ்சய் பாட்டீல் கூறியதாவது:-

மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி மற்றும் மேற்பரப்பில் நீர் சுத்தமாக இல்லை. டேங்கர் லாரிகள் மூலம் வினியோகிக்கப்படும் தண்ணீரும் தரம் குறைந்ததாக உள்ளது. இதன்மூலம் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. அரசு நிர்வாகம் தேர்தல் வேலைகளில் மும்முரமாகிவிட்டதால் வறட்சியை மறந்துவிட்டது. அடுத்த மாதம் (ஜூன்) மழை பெய்யவில்லை எனில் நிலைமை படுமோசமாகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்