கண்டமங்கலம் அருகே, முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு

கண்டமங்கலம் அருகே முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டது.

Update: 2019-05-20 22:45 GMT
விழுப்புரம், 

விழுப்புரத்தை அடுத்த கண்டமங்கலம் அருகே ஆழியூரில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் முட்புதரில் இருந்து நேற்று காலை குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது.

இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்தபோது அந்த முட்புதரில் பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள் கொடியுடன் கூடிய பச்சிளம் ஆண் குழந்தை இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த குழந்தையை மீட்டு கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் அங்கு போலீசார் விரைந்து சென்று குழந்தையை பார்வையிட்டனர்.

பின்னர் அந்த குழந்தையை கண்டமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து பராமரித்தனர். தொடர்ந்து, அந்த குழந்தை விழுப்புரம் சைல்டுலைன் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இந்த பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிவிட்டு சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்றும் எதற்காக முட்புதரில் குழந்தையை வீசிவிட்டு சென்றார் என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்