குடிநீர் வழங்கக்கோரி, காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே போக்குவரத்து பாதிப்பு

செஞ்சி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-05-21 22:00 GMT
செஞ்சி,

செஞ்சி அருகே வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் மேல்ஒலக்கூர் கிராமம் உள்ளது. இங்கு 750-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டன. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பெரும் சிரமங்களுக்கு இடையே அருகில் உள்ள வயல்களுக்கு கால்கடுக்க நடந்து சென்று விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். மேலும் தங்களுக்கு குடிநீர் வழங்க மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வல்லம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்அடிப்படையில் மேல்ஒலக்கூர் ஏரியில் ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் திறந்தவெளி குடிநீர் கிணறு வெட்ட அனுமதி வழங்கப்பட்டது.

இதையறிந்த பக்கத்து ஊரான கடிக்கப்பட்டு கிராம மக்கள் மேல்ஒலக்கூர் ஏரியில் கிணறு வெட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மேல் ஒலக்கூர் கிராம மக்கள் காலி குடங்களுடன் வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கண்டன கோஷம் எழுப்பினர். இதையறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் குலோத்துங்கன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் தீர்வு ஏற்படவில்லை.

இதில் மேலும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் அங்குள்ள திண்டிவனம்-செஞ்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் வருகிற 28-ந்தேதிக்குள் இருகிராம மக்களையும் அழைத்து பேசி ஏரியில் திறந்தவெளி குடிநீர் கிணறு வெட்ட நடவடிக்கை எடுப்பதோடு, குடிநீர் வினியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனை ஏற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திண்டிவனம்-செஞ்சி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்