குடிமராமத்து திட்டப் பணிகளை, மத்திய நீர்மேலாண்மை இயக்க குழுவினர் ஆய்வு
தேனி மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து திட்டப் பணிகளை மத்திய நீர்மேலாண்மை இயக்க குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.;
தேனி,
தேனி மாவட்டத்துக்கு மத்திய அரசின் நீர்மேலாண்மை இயக்க குழு உறுப்பினர்களான, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சக இணை இயக்குனர் அசோக்குமார் பர்மா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக இயக்குனர் சுதீப் ஸ்ரீவஷ்டவா, மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக தொழில் நுட்ப அலுவலர் ஸ்ரீனிவாசா ஆகியோர் நேற்று வந்தனர். அவர்கள் தேனி மாவட்டத்தில் நடந்து வரும், குடிமராமத்து திட்டப் பணிகள் மற்றும் மத்திய அரசின் நீர்மேலாண்மை இயக்க திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், பூதிப்புரம் கிராமத்தில் உள்ள ராஜபூபாலசமுத்திரம் கண்மாயை குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகளை இந்த குழுவினர், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் குழுவுடன் சென்று ஆய்வு செய்தனர். இந்த கண்மாய் சுமார் 121 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ரூ.35 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு வருகிறது.
இந்த திட்டப் பணிகள் விவரங்களை மத்திய குழுவினர் கேட்டறிந்தனர்.
அப்போது அந்த கண்மாய்க்கு தண்ணீர் எங்கிருந்து வருகிறது? என்று கேட்டனர். அதற்கு அதிகாரிகள் வாழையாறு என்ற ஆற்றில் இருந்து வருவதாக கூறினர். ஆற்றில் இருந்து தண்ணீர் வருவதாக இருந்தால் ஏன் கண்மாய் வறண்டு கிடக்கிறது? என்ற கேள்வியை எழுப்பினர். அப்போது, ஆற்றில் நீர்வரத்து இல்லை என்று அதிகாரிகள் பதில் அளித்தனர். இந்த கண்மாய்க்குள் அதிக அளவில் நாட்டுக்கருவேல மரங்கள் வளர்ந்து இருந்தன. அவற்றை அப்புறப்படுத்திவிட்டு மேலும் ஆழப்படுத்துமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து கண்டமனூர் அருகே மரிக்குண்டுவில் உள்ள கோடாங்கிநாயக்கர் கண்மாய் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டு வருவதை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் திலகவதி, செயற்பொறியாளர் கவிதா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.