கோவில்பட்டியில் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி - மகள் கண் எதிரே பரிதாபம்

கோவில்பட்டியில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், மகள் கண் எதிரே தாய் பலியானார்.

Update: 2019-08-13 22:30 GMT
கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 68). இவர் கோவில்பட்டி நகரசபையில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பேச்சியம்மாள் (64). இவர்களுடைய மகள் ஐசுவர்யா (28). இவருக்கு திருமணமாகி, நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். எனவே அவரை தலைபிரசவத்துக்காக, பெற்றோரின் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

நேற்று காலையில் பேச்சியம்மாள் தன்னுடைய மகள் ஐசுவர்யாவை மருத்துவ பரிசோதனைக்காக, கோவில்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அழைத்து சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

ஆட்டோவை கோவில்பட்டி லாயல் மில் காலனியைச் சேர்ந்த கணேசன் மகன் தங்கமாரி (32) ஓட்டினார். கோவில்பட்டி மாதாங்கோவில் ரோடு பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் ஆட்டோ மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவுக்கு அடியில் சிக்கிய பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ஐசுவர்யா, ஆட்டோ டிரைவர் தங்கமாரி ஆகிய 2 பேரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். ஐசுவர்யா தனது கண் முன்னே இறந்த தாயின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் இறந்த பேச்சியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் தங்கமாரியை கைது செய்தனர்.

ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்