அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா குரலெழுப்ப வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி தீர்மானம்

மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐ.டி. விங் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.;

Update:2026-01-11 22:41 IST

புதுக்கோட்டை,

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி (ஐடி விங்) மாநில மாநாடு புதுக்கோட்டையில் இன்று (ஜனவரி.11) நடைபெற்றது. ஐ.டி. விங் மாநில பொறுப்பாளரும், மாநில பொதுச்செயலாளருமான அகமது நவவி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் ஷபீக் அகமது வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர் சதாம் உசேன் தொகுப்புரையாற்றினார்.

இந்த மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில துணை தலைவர்கள் அப்துல் ஹமீது, அச.உமர் பாருக் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். மாநில செயலாளர் வழக்கறிஞர் ஹஸ்ஸான் பைஜி நன்றியுரையாற்றினார். இந்த மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐ.டி. விங் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:

1. கட்சியின் 2026 தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்திட களம் காண்போம்!

SDPI கட்சியின் "களத்தைத் தயார் செய்வோம் – 2026-ல் வெல்வோம்!" என்ற தேர்தல் முழக்கத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) முழு அர்ப்பணிப்புடனும் தீவிர உழைப்புடனும் களப்பணியை மேற்கொள்ள இந்த மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

கட்சியின் தேர்தல் வெற்றிக்கான முன்னணிப் போர்ப்படையாக ஐ.டி விங் செயல்படும். கட்சியின் செயல்திட்டங்கள், கொள்கை அறிக்கைகள், பிரச்சார யுக்திகள் ஆகியவற்றை டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் வாக்காளர்களிடம் விரைவாகவும் திறம்படவும் கொண்டு சேர்ப்பது, சமூக ஊடகங்களில் வலிமையான பிரச்சாரத்தை முன்னெடுப்பது, ஆன்லைன் களப்பணிகளைத் தீவிரப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் ஐ.டி விங் முழுமையான அர்ப்பணிப்புடன் ஈடுபடும்.

மாவட்ட அளவிலும், சட்டமன்றத் தொகுதி அளவிலும் ஐ.டி விங்க் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்காகத் தொடர்ச்சியான பயிற்சி முகாம்கள், டிஜிட்டல் களப்பயிற்சிகள், ஆன்லைன்-ஆப்லைன் இணைந்த பணிகளை மேற்கொள்வது என அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், 2026 தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் வெற்றிக்கு ஐ.டி விங்க்-இன் களப்பணிகளே தலையாய காரணம் என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில், அனைவரும் ஒன்றிணைந்து அயராது பணியாற்ற வேண்டும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

2. தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வி மறுசீரமைப்பு

வேகமாக மாறிவரும் அறிவியல் உலகில், கல்வி அமைப்பு எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்றவாறு மறுசீரமைக்கப்பட வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகள், பள்ளி மற்றும் உயர்கல்வியில் தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வி முறையை உடனடியாக அமலாக்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள், AI மற்றும் நவீன தொழில்நுட்ப பாடத்திட்டங்கள், நடைமுறைப் பயிற்சிகளை செயல்படுத்திட வேண்டும்.

மாணவர்கள் பயிலும் காலத்திலேயே AI மற்றும் IT சார்ந்த வேலைவாய்ப்பு மையப் பயிற்சிகள், திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை அனுபவத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் இந்த மாநாடு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

3. தொழில்நுட்ப முதலீடு மற்றும் இளைஞர் திறன் மேம்பாடு

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், இளைஞர்களுக்கு நிலையான, தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் தொழில்நுட்பம் மற்றும் எதிர்காலம் சார்ந்த முதலீடுகள் இன்றியமையாதவை என்பதை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மக்கள் நலன் மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட கொள்கைகளை உடனடியாக வகுத்து அமல்படுத்த வேண்டும். இக்கொள்கைகள் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் எதிர்காலத் தொழில்நுட்ப நிறுவனங்கள் நாட்டிலும் மாநிலத்திலும் முதலீடு செய்ய ஊக்குவிப்பதாக அமைய வேண்டும்.

மேலும், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புதிய TIDEL (IT) பூங்காக்களை அமைக்க வேண்டும். தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளுக்கு இளைஞர்களைத் தயார்படுத்தும் வகையில், அரசு அனைத்து மாவட்டங்களிலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை, தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பயிற்சி மையங்கள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்த மாநாடு கோருகிறது.

4. டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் சமூக ஊடக துஷ்பிரயோகங்களைத் தடுத்தல்

டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சைபர் குற்றங்கள், போலி செய்திகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் சமூக ஊடக துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பதை இந்த மாநாடு ஆழ்ந்த கவலையுடன் கவனத்தில் கொள்கிறது.

எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் டிஜிட்டல் பாதுகாப்பை வலுவூட்ட சட்டங்கள், கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தை உடனடியாக மேம்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறது.

குறிப்பாக, சமூக ஊடகங்களில் பெண்கள் மீதான அவமதிப்பு, அச்சுறுத்தல் மற்றும் தவறான உள்ளடக்கங்களைத் தடுத்து, அவர்களின் மரியாதை, பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிசெய்ய கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மேலும், போலி செய்திகள், வெறுப்புப் பதிவுகள் மற்றும் சமூக மோதலைத் தூண்டும் தகவல்களைத் தடுக்க தெளிவான கொள்கைகள், சட்டங்கள் மற்றும் பொறுப்புணர்வு அமைப்புகளை அமல்படுத்த வேண்டும்.

இதன் மூலம் பாதுகாப்பான, பொறுப்பான மற்றும் சமூக ஒற்றுமையைப் பேணும் டிஜிட்டல் சூழலை உருவாக்க வேண்டுமென இந்த மாநாடு உறுதியுடன் கோருகிறது.

5.அமெரிக்காவின் ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா தைரியமான குரலெழுப்ப வேண்டும்!

வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் ஏகாதிபத்திய நடவடிக்கைகள், குறிப்பாக அந்நாட்டு அதிபர் மற்றும் அவரது மனைவியின் கைது உள்ளிட்ட செயல்பாடுகள், கடும் கண்டனத்திற்குரியவை. மேலும், டென்மார்க்கிற்குச் சொந்தமான கிரீன்லாந்தை வாங்குவது எனப் பகிரங்கமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது, சர்வதேச சட்டத்தையும் நாடுகளின் இறையாண்மையையும் நேரடியாக மீறும் ஆதிக்க முயற்சியாகும். இத்தகைய நடவடிக்கைகள் உலக அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

இந்த ஆக்கிரமிப்பு மற்றும் ஆதிக்கவாத அணுகுமுறை, சர்வதேச உறவுகளை சீர்குலைத்து, பலவீனமான நாடுகளின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் உருமாறியுள்ளது. இவற்றை அமைதியாக ஏற்றுக்கொள்வது, உலக அளவிலான நியாயமான ஒழுங்கை மேலும் சிதைத்துவிடும்.

எனவே, இந்தியா இத்தகைய ஆதிக்க முயற்சிகளுக்கு வெளிப்படையாகவும் உறுதியாகவும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இறையாண்மை, சமத்துவம் மற்றும் சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட உலக ஒழுங்கைப் பாதுகாக்க, தனது சுதந்திரமான மற்றும் தைரியமான குரலை உலக அரங்கில் ஒலிக்கச் செய்ய வேண்டும் என இந்த மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

Tags:    

மேலும் செய்திகள்