வயலப்பாடி புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்

வயலப்பாடியில் நடந்த புனித அந்தோணியார் ஆலய தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2019-08-14 22:30 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், அரியலூர்- திட்டக்குடி சாலை வயலப்பாடி கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் 5-ம் ஆண்டு தேர்பவனி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில் கொடியேற்றத்துடன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு புரத்தாக்குடி முன்னாள் பங்குதந்தை ராஜேந்திரசேகர் தலைமை தாங்கி, திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். குழுமூர் பங்குதந்தை மைக்கேல், தலைமை ஆசிரியர் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து அருள்செபஸ்பதியான் தலைமையில் அனைவரும் பங்கேற்ற கூட்டு பாடல் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கொடி இறக்குதல் நிகழ்ச்சி

அதனை தொடர்ந்து கடந்த 12-ந் தேதி மாலை திருஜெபமாலை, தியான உரை மற்றும் ஒப்புரவு அருட்சாதன வழிபாடு மற்றும் திருப்பலி ஆகியவை நடுவலூர் பங்குதந்தை ராபர்ட் தலைமையில் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு ஆடம்பர கூட்டு பாடல் திருப்பலியும், 3 ஆடம்பர தேர் திருபவனியும் நடைபெற்றது. குழுமூர் சேவியர் ஆசீர்வதித்து தேர் பவனியை தொடங்கி வைத்தார். முன்னதாக சப்பரத்தேர் செல்லக்கூடிய முக்கிய வீதிகளில் கொடி ஊர்வலம் நடைபெற்றது. திருப்பலி மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சிகளில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கிறிஸ்தவர்கள், கிராம மக்கள், கிராம முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று திருப்பலி கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் செய்திகள்