மரபணு மாற்று விதையை தடை செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் சீர்காழியில் நடந்தது

சீர்காழியில் மரபணு மாற்று விதையை தடை செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-08-14 23:00 GMT
சீர்காழி,

சீர்காழியில், பாரதீய கிசான் சங்கம் சார்பில் மரபணு மாற்று விதையை தடை செய்யக்கோரியும், பாரம்பரிய விதைகள் மீது விவசாயிகளின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தை சேர்ந்த விவசாயி திலகர் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் இலங்கேஸ்வரன், மாவட்ட பொருளாளர் திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் குழந்தைவேலு வரவேற்றார். இதில் பாரதீய கிசான் சங்க மாநில துணை தலைவர் பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

பயிர்க்காப்பீட்டு தொகை

ஆர்ப்பாட்டத்தில் கேன்சர் போன்ற நோய்களை உருவாக்கும் மரபணு மாற்ற விதைகளை சந்தைப்படுத்தும் பன்னாட்டு கம்பெனிகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும். மழை குறைவதற்கும், நிலத்தடி நீர் குறைவதற்கும் காரணமான யூக்கலிப்டஸ், சீமை கருவேல மரங்களை அழிக்க வேண்டும். பயிர்க்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை உடனே வழங்க வேண்டும். மழை வளத்தை கொடுக்கும் இலுப்பை, அத்தி, அரசு, பனை போன்ற மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் இயற்கை விவசாய சங்க மாவட்ட செயலாளர் செல்லப்பா நன்றி கூறினார்.

கோரிக்கை மனு

இதனை தொடர்ந்து விவசாயிகள் ஊர்வலமாக புறப்பட்டு சீர்காழி தாலுகா அலுவலகம் சென்று தாசில்தார் சபிதாதேவியிடம் மரபணு மாற்று விதையை தடை செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்