குளிருக்கு வீட்டில் தீ மூட்டிய குடும்பத்தினர்; மூச்சுத்திணறி 3 பேர் பலி

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2026-01-11 20:32 IST

சண்டிகர்,

உத்தரபிரதேசம், பஞ்சா, டெல்லி, பீகார் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் குளிர் அதிக அளவில் காணப்படுகிறது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதனிடையே, பஞ்சாப் மாநிலம் தரன் தரன் மாவட்டம் அலிபூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஷ்தீப் சிங் (வயது 21). இவருக்கு திருமணமாகி ஜஷந்தீப் கவுர் (வயது 20) என்ற மனைவியும், குர்பாஸ் சிங் (ஒன்றரை வயது) என்ற மகனும் இருந்தனர்.

இந்நிலையில், அதிக குளிரில் இருந்து தப்பிக்க அர்ஷ்தீப் சிங் நேற்று இரவு வீட்டிற்குள் தீ மூட்டியுள்ளார். வீட்டில் உள்ள ஒரு அறையில் தீ மூட்டி அறையின் கதவு, ஜன்னல்களை மூடியுள்ளார். பின்னர், அர்ஷ்தீப் சிங் தனது மனைவி, மகன் மற்றும் 10 வயதான உறவுக்கார சிறுமியுடன் அந்த அறையில் உறங்கியுள்ளார்.

அப்போது நெருப்பில் இருந்து வெளியேறிய புகையால் தூங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில், அனைவரும் மயங்கியுள்ளனர்.

இன்று காலை வெகுநேரமாகியும் வீட்டின் கதவுகள் திறக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு குடும்பத்தினர் 4 பேரும் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை டாக்டர்கள் பரிசோதித்தனர்.

இதில், அர்ஷ்தீப் சிங் அவரது மனைவி ஜஷந்தீப் கவுர் மகன் குர்பாஸ் சிங் ஆகிய 3 பேரும் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர் . அதேவேளை, 10 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்