நாகர்கோவில் அரசு விடுதியில் வழங்கப்படும் உணவில் புழு-பூச்சிகள் மாணவிகள் குற்றச்சாட்டு

நாகர்கோவில் அரசு விடுதியை சேர்ந்த மாணவிகள் 25-க்கும் மேற்பட்டோர் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

Update: 2019-08-14 22:45 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பு அருகே அருள் நகர் பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் குமரி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 55 மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்தநிலையில் இந்த விடுதியை சேர்ந்த மாணவிகள் 25-க்கும் மேற்பட்டோர் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் தங்கி படிக்கும் விடுதியில் எங்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது. அந்த உணவில் சில நேரங்களில் புழு, பூச்சிகள் கிடைக்கிறது. அதே சமயத்தில் சாப்பாடு தரமாக தயார் செய்வதும் கிடையாது. இதனால் சாப்பிட இயலாமல் இருந்து வருகிறோம். இதுகுறித்து அலுவலக அதிகாரிகளிடம் புகார் கூறியிருக்கிறோம். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக புகார் கொடுத்த எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி, மனதை புண்படுத்துகிறார்கள். எனவே இதுகுறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்