அயோத்தி தீர்ப்புக்கு சரத்பவார் வரவேற்பு ‘மராட்டிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாது' என பேட்டி

அயோத்தி தீர்ப்பை வரவேற்று உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இந்த தீர்ப்பு மராட்டிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறினார்.

Update: 2019-11-10 00:20 GMT
மும்பை,

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புக்கு சொந்தமானது என்றும், அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வரவேற்று இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஒருமனதாக வழங்கி உள்ள தீர்ப்பு நாட்டின் தீவிரமான பிரச்சினைகளை தீர்க்க உதவி செய்யும். நீதித்துறை சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன்களை பாதுகாப்பது பற்றி பேசியுள்ளது. இது ஒரு நல்ல விஷயம். சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இந்த தீர்ப்பை வரவேற்று மதிக்க வேண்டும்.

அயோத்தி தீர்ப்பு மராட்டிய அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் மக்கள் இதை மறந்து விடுவார்கள். மக்களுக்கு இது ஒரு முக்கியமான விஷயமாக இருக்காது. இது ஒரு அரசியல் பிரச்சினை இல்லை என்பதால் அதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்க தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அயோத்தி தீர்ப்புக்கு பிறகு சில பாரதீய ஜனதா தலைவர்கள் கோவிலுக்கு சென்றது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த சரத்பவார், “கோவிலுக்கு செல்ல வேண்டுமா அல்லது மசூதிக்கு செல்ல வேண்டுமா என்பது அவரவர் விருப்பம்” என்றார்.

மேலும் செய்திகள்