தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 27-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, பெரம்பலூரில் உள்ள சாரணர் கூட்டரங்கில் நடந்தது.

Update: 2019-11-10 22:30 GMT
பெரம்பலூர்,

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 27-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, பெரம்பலூரில் உள்ள சாரணர் கூட்டரங்கில் நடந்தது. இதற்கு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ராமர் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மணிமாறன் வரவேற்றார். வேப்பந்தட்டை அரசு கல்லூரியின் இயற்பியல் துறைத்தலைவர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 13 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் நகராட்சி கழிவுகளில் இருந்து எத்தனால் தயாரிப்பது, பிளா ஸ்டிக் கழிவுகளில் இருந்து திரவ எரிபொருள் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மொத்தம் 60 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து விளக்கமளித்தனர். ஆய்வு கட்டுரைகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வியாண்டு ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், அரும்பாவூர் அரசு பள்ளி ஆசிரியர் தாண்டவராஜ், வேப்பந்தட்டை அரசு கலை கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர் தங்கத்துரை ஆகியோர் மதிப்பீடு செய்தனர். இதில் சிறந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவ-மாணவிகள் வேலூரில் வருகிற 16, 17, 18-ந் தேதிகளில் நடைபெறும் மாநில அளவிலான மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் செய்திகள்