திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பதா? அதிகாரிகளுக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் - அமைச்சர் கந்தசாமி எச்சரிக்கை

திட்டங்களை செயல் படுத்தவிடாமல் அதிகாரிகள் தடுக்கின்றனர். இதே நிலை நீடித்தால் அதிகாரிகளுக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று அமைச்சர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-11-11 23:00 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம், மாவட்ட கிராம வளர்ச்சி நிறுவனம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச முடநீக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தந்தை பெரியார் நகரில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் நடந்தது.

விழாவிற்கு கோகுலகிருஷ்ணன் எம்.பி. தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு முடநீக்கு உபகரணங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி அரசு சார்பில் இலவச அரிசி, உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். ஆனால் கடந்த 2, 3 ஆண்டாக எதையும் செய்ய முடியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சொல்வது எதுவும் நடப்பதே இல்லை. இலவச அரிசி, வேட்டி சேலை, சர்க்கரை, மளிகை பொருட்களை மக்கள் விரும்புகின்றனர். ஆனால் ரேஷன்கடை ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.

அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இப்படி இருந்தால் திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த முடியும். அரசு அதிகாரிகள் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுக்கின்றனர். இன்னும் 18 மாதங்கள் தான் இந்த ஆட்சி உள்ளது. அரசு அதிகாரிகள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அதிகாரிகளுக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அரசு துறைகளில் 7 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. அவற்றை நிரப்ப நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதற்கு மாநில நிர்வாகி அனுமதி தருவாரா? ஒட்டு போட்ட மக்கள் எங்களிடம்தான் கேள்வி கேட்கின்றனர். அதிகாரிகளிடம் கேள்வி கேட்பது இல்லை. அதிகாரிகளுக்கு அப்படியில்லை. வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் சம்பளம் கிடைத்துவிடுகின்றது. இதனால் மெத்தன போக்கோடு உள்ளனர். அதிகாரிகள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், மத்திய உள்துறை மந்திரிக்கும் கடிதம் எழுதிவிட்டு ஜனாதிபதி மாளிகை முன்பு போராட்டம் நடத்துவேன்.

புதுச்சேரியை ஒட்டியுள்ள கடலூர் மாவட்டத்தில் புதுச்சேரியைவிட 2 மடங்கு மக்கள் தொகை உள்ளனர். ஆனால் அங்கு ஒரே ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தான் உள்ளனர். மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றி நடந்து கொண்டு வருகிறது. சென்னையில் ஒரு திட்டத்தை அந்த மாநில முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தால், அது தமிழகம் முழுவதும் உடனடியாக செயல்படுத்தப்படுகின்றது. ஆனால் புதுச்சேரியில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தும், எந்த ஒரு வேலையும் நடப்பது இல்லை.

எனவே புதுச்சேரி மாநிலத்திற்கு இவ்வளவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேவையா? என்பதை மத்திய அரசும், நிர்வாகியும் பரிசீலனை செய்ய வேண்டும். இதேபோல் மேல் மட்டத்தில் பல அதிகாரிகள் உள்ளனர். ஆனால் மக்களுக்கான திட்டங்களை செய்ய, அடிப்படை பணிகளை செய்யும் தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி, பல்வேறு துறைகளில் இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பதவிகள் காலியாக உள்ளது. அதை நிரப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்கள் நலத்திட்டங்களை செய்ய நிர்வாகி தடையாக உள்ளார். மக்கள் நலத்திட்டங்களை செய்ய முடியாமல் நான் அமைச்சராக இருந்து என்ன பயன்? இதற்கு முடிவு தெரிந்தாக வேண்டும். ஒன்று எங்களை முடிவு எடுக்க விடுங்கள். இல்லை நீங்களாவது முடிவு எடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஜெயபால் எம்.எல்.ஏ., சமூக நலத்துறை செயலாளர் ஆலிஸ்வாஸ், இயக்குனர் சாரங்கபாணி , துணை இயக்குனர் கலாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 101 பயனாளிகளுக்கு முடநீக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்