மத்திய, மாநில அரசுகளை நம்பி தே.மு.தி.க. கிடையாது விஜய பிரபாகரன் பரபரப்பு பேச்சு

மத்திய, மாநில அரசுகளை நம்பி தே.மு.தி.க. கிடையாது என்று விஜய பிரபாகரன் கூறினார்.

Update: 2019-11-17 22:30 GMT
வடவள்ளி, 

மத்திய, மாநில அரசுகளை நம்பி தே.மு.தி.க. கிடையாது என்று விஜய பிரபாகரன் கூறினார்.

கட்சி அலுவலகம் திறப்பு

தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் கோவை மாநகர் மேற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வடவள்ளியில் நடந்தது. கோவை மாநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.முருகன் தலைமை தாங்கினார். கழக துணை செயலாளர் அக்பர் வாழ்த்துரை வழங்கினார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

ஓட்டு சதவீதம்

தே.மு.தி.க. ஓட்டு சதவீதம் குறைந்து விட்டதாக சிலர் பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள். வரும் உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு அதிக வாக்கு வங்கி உள்ளது என்பதை நிரூபிப்போம். தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதாக சில நடிகர்கள் கூறுகின்றனர். அப்படி எதுவும் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. வெற்றிடத்தை நிரப்பும்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எப்போதும் மக்களின் வளர்ச்சி பற்றியே சிந்தித்து வருகிறார். இதனால் தான் கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே எதிர்க்கட்சி வரிசையில் மக்கள் அமர்த்தினார்கள். இனிவரும் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தே.மு.தி.க. ஆட்சியை கைப்பற்றும்.

கோவை மருமகன்...

மத்திய, மாநில அரசுகளை நம்பி தே.மு.தி.க. கிடையாது. சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்ட ஒரே கட்சி தே.மு.தி.க. மட்டுமே. எனது பெயரை சொல்லி கோஷம் போட வேண்டாம். என்னை மக்களில் ஒருவனாக பாருங்கள். கோவை எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். கூடிய விரைவில் கோவையின் மருமகனாக ஆக இருக்கிறேன். வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்து வெற்றியை விஜயகாந்த்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழக முதல்- அமைச் சராக விஜயகாந்த் பதவியேற்றால் மக்களை தங்கதட்டில் வைத்து தாலாட்டுவார். இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் கிழக்கு மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில், பகுதி கழக செயலாளர் ரமேஷ் குமார், நிர்வாகிகள் தியாகராஜன், தினகரன், முத்து, வெங்கடேஷ்வரன், சிங்கை சந்துரு மற்றும் கோவை மாநகர், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்