காரைக்குடியில், மின்வாரிய ஊழியர் போல் நடித்து வயதான தம்பதியிடம் 10½ பவுன் நகை பறிப்பு

மின்வாரிய ஊழியர் போல் நடித்து வீடு புகுந்து வயதான தம்பதியிடம் 10½ பவுன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-11-22 22:30 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் செல்லம் (வயது 87). இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய மனைவி பத்மாவதி (80). இவர்களின் மகன்கள் ்சென்னையில் வசிப்பதால், ெசல்லமும், அவருடைய மனைவியும் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் இவர்கள் வீட்டிற்கு வந்த வாலிபர் ஒருவர், மின்சார வாரியத்தில் இருந்து வருவதாகவும், இந்த பகுதியில் உள்ள வீடுகளில் மின் கசிவு இருப்பதாக புகார் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த வயதான தம்பதியினர், அவரை வீட்டினுள் அனுமதித்துள்ளனர். அவர் உள்ளே சென்று அங்குள்ள மின் சாதனங்களை சோதனை செய்து பார்த்தார்.

இதையடுத்து சுவரில் ஒரு இடத்தை காண்பித்து, அந்த இடத்தில் மின்கசிவு உள்ளது போல் தெரிகிறது என்று கூறி, தண்ணீரை கொண்டு வர செய்து அந்த சுவரில் லேசாக ஊற்றி ஏதோ சோதனை நடத்துவது போல் நாடகமாடியுள்ளார்.

முழுமையாக சோதனை நடத்துவதற்கு தேவையான கருவிகளை கொண்டு வர மறந்துவிட்டேன். தங்கத்தை வைத்து மின்கசிவு தன்மையை முழுமையாக பரிசோதித்துப் பார்த்து விடலாம் என்று பத்மாவதியிடம் அந்த வாலிபர் கூறியுள்ளார்..

இதையும் உண்மை என்று நம்பிய பத்மாவதி தனது தங்கச் சங்கிலியை கழற்றி கொடுத்துள்ளார். அந்த தங்கச்சங்கிலியை மின் சாதனங்கள் மீது வைத்து சோதனை செய்வதுபோல் செய்துவிட்டு, தங்கம் போதவில்லை என்று கூறி மேலும் பத்மாவதி அணிந்திருந்த மற்ற நகைகளையும் சேர்த்து மொத்தம் 10½ பவுன் நகைகளை வாங்கிக் கொண்டார்.

ஒருகட்டத்தில் திடீரென வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த அந்த வாலிபர், அங்கு தயாராக நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி கண் இமைக்கும் நேரத்தில் நகையுடன் தப்பிச் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வயதான தம்பதியினர் இதுகுறித்து குன்றக்குடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிச் சென்ற வாலிபரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

மின்வாரிய ஊழியர் போல் வீடு புகுந்து நூதன முறையில் வயதான தம்பதியிடம் வாலிபர் நகை பறித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்