திருப்பூரில் மாநகராட்சி ஊழியர் மதுபாட்டிலால் குத்திக்கொலை - போலீசார் விசாரணை

திருப்பூரில் மாநகராட்சி ஊழியர் மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-12-01 23:30 GMT
திருப்பூர், 

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 36). இவர் திருப்பூர் பெரிச்சிபாளையம் எம்.ஆர். தோட்டம் பகுதியில் தங்கி இருந்து மாநகராட்சியில் குடிநீர் திறந்து விடும் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பொன்னம்மாள். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

நேற்று அதிகாலை 4 மணிக்கு மதுரையில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக வீட்டில் இருந்து ராமச்சந்திரன் புறப்பட்டார்.

இந்த நிலையில் காலை 8 மணி அளவில் ராமச்சந்திரன் சங்கிலிபள்ளம் பகுதியில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார், இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ராமச்சந்திரன் முகத்தில் மதுபாட்டிலால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

இதனால் காலையில் மது குடிப்பதில் தகராறு ஏற்பட்டு அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்பட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பகுதி மற்றும் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் அதிகாலையில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதிகாலையில் மாநகராட்சி ஊழியர் பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்