வீடுகள் மீது தடுப்புச்சுவர் விழுந்து 17 பேர் பலி: ஜவுளிக்கடை உரிமையாளர் கைது

வீடுகள் மீது தடுப்புச்சுவர் விழுந்து 17 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஜவுளிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-03 22:45 GMT
மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் மேட்டுப்பாளையத்தில் சக்கரவர்த்தி என்ற பெயரில் ஜவுளிக்கடை வைத்து உள்ளாா். இவர் தனது வீட்டை சுற்றி சுமார் 15 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் கட்டி உள்ளார். இதன் அருகில் ஏராளமான ஓட்டு வீடுகள் உள்ளன.

இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் ஈரப்பதத்துடன் காணப்பட்ட அந்த தடுப்புச்சுவர் இடிந்து அருகில் இருந்து வீடுகள் மீது விழுந்தன. இதில் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இந்த நேரத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த 3 குழந்தைகள் உள்பட 17 பேர் இடிபாடுகளுக்குள் புதையுண்டு பரிதாபமாக பலியனார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். பொக்லைன் எந்திரம் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 17 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விபத்துக்கு 15 அடி உயர தடுப்பு சுவர்தான் முக்கிய காரணம். எனவே அதை கட்டிய ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியனை கைது செய்ய வேண்டும் என்று கூறினர். அதுவரை பலியானவர்களின் உடல்களை வாங்க மாட்டோம் என்று கோஷமிட்டனர். இதனால் வேறு வழியின்றி போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதற்கிடையில், சிவசுப்பிரமணியன் மீது, அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்துதல், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல் ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையறிந்த சிவசுப்பிரமணியன் தலைமறைவானார். மேலும் ஜவுளிக்கடை உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இதனால் சிவசுப்பிரமணியனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கோவில்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த சிவசுப்பிரமணியனை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மதுக்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்