திருவெண்ணெய்நல்லூர் அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம் - 100 பேர் கைது

திருவெண்ணெய்நல்லூர் அருகே ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-12-05 22:30 GMT
அரசூர், 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு காரணமான வீட்டின் உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரி தமிழகத்தின் பல இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று காலை விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆலங்குப்பம் ரெயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாமரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் இளங்கோவன், துணை செயலாளர் அறிவுக்கரசு, தொகுதி செயலாளர்கள் சேரன், விடுதலைச்செல்வன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கனகஅம்பேத், நிர்வாகிகள் இளவரசு, வடிவேல், அறிந்தவன், மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இவர்கள் மேட்டுப்பாளையம் சம்பவத்தை கண்டித்தும், அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோ‌‌ஷம் எழுப்பியபடி மதுரை- விழுப்புரம் சென்ற பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன் பிறகு மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக மதுரை- விழுப்புரம் பயணிகள் ரெயில் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச்சென்றது.

மேலும் செய்திகள்