குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்: 1201 பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 1201 பதவிகளுக்கு இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது

Update: 2019-12-08 22:15 GMT
நாகர்கோவில்,

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான புதிய தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 16-ந் தேதி ஆகும். 17-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் 19-ந் தேதி ஆகும். இதையடுத்து முதல்கட்ட வாக்குப்பதிவு 27-ந் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30-ந் தேதியும் நடைபெறும்.

1201 பதவிகளுக்கு...

குமரி மாவட்டத்தில் 95 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கும், 984 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிக்கும், 111 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிக்கும், 11 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிக்கும் ஆக மொத்தம் 1201 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இதற்காக கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடக்கூடியவர்கள் அந்தந்த பஞ்சாயத்து அலுவலகங்களில் அதாவது 95 பஞ்சாயத்து அலுவலகங்களிலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

ஏற்பாடுகள்

கிராம பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

இதற்காக பஞ்சாயத்து அலுவலகங்களிலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்