குளச்சல் கடலில் நின்ற கப்பலால் பரபரப்பு

குளச்சல் கடலில் நின்ற கப்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-09 23:00 GMT
குளச்சல்,

குளச்சல் அருகே குறும்பனையில் நடுக்கடலில் நேற்றுமுன்தினம் மாலை ஒரு கப்பல் நின்று கொண்டிருந்தது. அந்த கப்பல் குளச்சல் கடல் வழியாக செல்வதாக பொதுமக்கள் நினைத்தனர்.

பின்னர், அந்த கப்பல் அங்கிருந்து புறப்பட்டு குளச்சல் கடல் பகுதிக்கு சென்றது. அங்கு கரையில் இருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் நேற்று பகல் முழுவதும் நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் கடற்கரையில் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பழுது

இதுபற்றி குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கடற்கரைக்கு சென்று அந்த கப்பலை பார்வையிட்டனர். தொடர்ந்து, போலீசார் தூத்துக்குடி துறைமுக அலுவலகத்தை தொடர்பு கொண்டு கப்பல் குறித்த விவரங்களை கேட்டனர்.

அப்போது, அந்த கப்பல் கடலில் எண்ணெய் வளம் பற்றி ஆய்வுப்பணியில் ஈடுபடும் இந்திய நாட்டுக்கு சொந்தமான ரிக் ரக கப்பல் என்றும், கோவாவில் இருந்து உடன்குடிக்கு செல்லும் வழியில் ஓய்வுக்காக நிறுத்தி இருப்பதாகவும் துறைமுக ஊழியர் ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து அங்கு நிலவி இருந்த பரபரப்பு ஓய்ந்தது.

இதுபற்றி கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீனிடம் கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி கல்லாமொழியில் அனல்மின் நிலையப்பணி நடக்கிறது. அங்கு சிறிய கப்பலில் சரக்கு கொண்டு செல்லும் போது, அது பழுதடைந்து நின்று விட்டது. அதை சரி செய்து அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்