காய்கறி கடையின் கதவை உடைத்து 60 கிலோ வெங்காயம்-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மயிலாடுதுறையில், காய்கறி கடையின் கதவை உடைத்து 60 கிலோ வெங்காயம்- பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-12-10 23:00 GMT
மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை டபீர் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 45). இவர், மயிலாடுதுறை வண்டிக்காரத்தெருவில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சேகர் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்புற கதவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வெங்காயம் திருட்டு

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது ரூ.9 ஆயிரம் மதிப்பிலான 60 கிலோ வெங்காயம் மற்றும் காய்கறிகள், ரூ.12 ஆயிரம், 3 செல்போன்கள் ஆகியவை திருட்டுப்போய் இருந்தது. இதைப்போல சேகர் கடைக்கு அருகில் உள்ள முகமதுராவூப் என்பவருக்கு சொந்தமான டீக் கடையின் முன்புறம் உள்ள இரும்பு ‌‌ஷட்டரின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.7 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வெங்காயத்தின் விலை அதிகமாக விற்கும் நிலையில் தற்போது கடையின் கதவை உடைத்து வெங்காயம் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்