வடமதுரை அருகே, தலை துண்டித்து வாலிபரை கொன்ற தொழிலாளி சிக்கினார்

வடமதுரை அருகே வாலிபரின் தலையை துண்டித்து கொலை செய்து கிணற்றில் வீசிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-10 22:30 GMT
வடமதுரை, 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த பாடியூர் அருகே எட்டிக்குளத்துப்பட்டியில் இருந்து மோளப்பாடியூர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான கிணறு உள்ளது. அந்த கிணற்றில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில் வாலிபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் குளத்தூரை சேர்ந்த நாகராஜ் (வயது 30) என்று தெரியவந்தது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. நாகராஜின் சொந்த ஊர், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள போடிபட்டி காமராஜ் நகர் ஆகும்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வடமதுரை அருகே உள்ள ஒரு தனியார் அட்டை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது குளத்தூரை சேர்ந்த முத்துலட்சுமி (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீமதி(4) என்ற மகள் உள்ளார். நாகராஜின் குடும்பத்தினர் குளத்தூர் அருகே உள்ள போடிபட்டியில் வசித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக, புதிதாக அட்டை தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதற்கு நாகராஜ் முயற்சி செய்தார். இதுதொடர்பாக அவர் அடிக்கடி கோவிலூருக்கு சென்று வந்தார். இதனால் அவர் கோவிலூருக்கு சென்ற இடத்தில், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கோவிலூரை சேர்ந்த நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து நாகராஜ் அடிக்கடி மது குடிப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் தேடினர். இந்தநிலையில் கோவிலூர் இந்திராநகரை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி கார்த்தி கண்ணன் (19) என்பவர், நாகராஜை கொலை செய்ததாக பாடியூர் கிராம நிர்வாக அலுவலர் ஜோதிமணியிடம் சரண் அடைந்தார்.

இதனையடுத்து அவர் வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வடமதுரை அருகே உள்ள மோளப்பாடியூரை சேர்ந்த ராஜா (35) என்பவருக்கு கடனாக ரூ.45 ஆயிரத்தை நாகராஜ் கொடுத்துள்ளார். அதனை திருப்பித்தருமாறு நாகராஜ் அடிக்கடி ராஜாவை கேட்டார். இதனால் நாகராஜை கொலை செய்ய ராஜா திட்டமிட்டார். இந்த திட்டத்தை பற்றி கார்த்தி கண்ணனிடம் ராஜா கூறினார். கார்த்தி கண்ணனும் நாகராஜை கொலை செய்ய சம்மதித்தார்.

அதன்படி கடந்த மாதம் 20-ந்தேதி நாகராஜை மது அருந்த எட்டிக்குளத்துப்பட்டியில் உள்ள காட்டுப்பகுதிக்கு ராஜாவும், கார்த்தி கண்ணனும் அழைத்து சென்றனர். அளவுக்கு மீறி மதுபானம் குடித்த நாகராஜ் மயக்கம் அடைந்தார். அப்போது 2 பேரும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். மேலும் அவருடைய தலையை துண்டித்தனர்.

பின்னர் உடலை கல்லில் கட்டி எட்டிக்குளத்துப்பட்டியில் உள்ள கிணற்றில் வீசினர். சாக்குப்பையில் தலையை போட்டு, பி.கொசவபட்டியில் உள்ள பாறைக்குளம் கிணற்றில் வீசி சென்று விட்டனர். கார்த்தி கண்ணன் கூறிய தகவலின் பேரில், அந்த கிணற்றில் இருந்து நாகராஜின் தலை மீட்கப்பட்டது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இதற்கிடையே கார்த்தி கண்ணனை போலீசார் கைது செய்தனர். பின்னர் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்