ஏர்வாடி அருகே, டிராக்டர் டிரைவர் கொலையில் தொழிலாளி கைது

ஏர்வாடி அருகே நடந்த டிராக்டர் டிரைவர் கொலையில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-11 22:30 GMT
ஏர்வாடி, 

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள நல்லான்குளத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 51) டிராக்டர் டிரைவர். இவருக்கு மனைவி, மகன் உள்ளனர். கணவன்-, மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்திரன் தனது பெற்றோரின் ஊரான ஆனைகுளத்தில் வசித்து வந்தார்.

கடந்த 7-ந் தேதி அங்குள்ள ஒருவரின் வீட்டுக்கு சந்திரன் வேலைக்கு சென்றார். அங்கு சிலருடன் தங்கி வேலை பார்த்து வந்தார். பின்னர் இரவில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சந்திரன் அடித்துக் கொலை செய்யப்பட்டதும், அவருடன் தங்கியிருந்த நபர் மாயமானதும் தெரியவந்தது. இதையடுத்து மாயமான நபர் யார்? என்று விசாரணை நடத்தியதில், சேரன்மாதேவி அருகே உள்ள கங்கணாங்குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான சமுத்திர பாண்டி (37) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசாரிடம் அவர் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

சம்பவத்தன்று நானும், சந்திரனும் ஒன்றாக மது குடித்தோம். அப்போது எங்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் என்னை அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், அங்கு கிடந்த இரும்பு கம்பியால் அவரது தலையில் ஓங்கி அடித்தேன். இதில் அவர் இறந்து விட்டார். பின்னர் நான் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டேன். போலீசார் தேடி கண்டுபிடித்து என்னை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சமுத்திர பாண்டியை போலீசார் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்