மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த மர்ம நபர்கள்... ஓடும் வாகனத்தில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்
தேசிய நெடுஞ்சாலையில் அரை நிர்வாண கோலத்தில் பெண் மயங்கிய நிலையில் கிடந்தார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் உனகுந்து தாலுகா பேவூர் கிராமத்தில் 40 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது சகோதரருடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. பின்னர் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது அறிந்ததும் அவரது கணவர் விவாகரத்து பெற்று விட்டு சென்றார்.
இந்தநிலையில் கூடலமங்களா கிராஸ் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அந்த பெண் அரை நிர்வாண கோலத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உனகுந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக உனகுந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பாகல்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதை அறிந்தனர். அதுமட்டுமின்றி அவரை கற்பழித்த மர்ம நபர்கள், ஓடும் வாகனத்தில் இருந்து கீழே தூக்கி வீசி இருப்பதாகவும், அதனால் அந்த பெண் பலத்த காயம் அடைந்திருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனை கேட்ட அந்த பெண்ணின் சகோதரர் அதிர்ச்சியடைந்து உனகுந்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.