கரூர் துயரம் தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ முன்வைக்க உள்ள முக்கிய கேள்விகள் என்னென்ன.?
சற்று நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் முன்பு விஜய் ஆஜராக உள்ளார்.;
புதுடெல்லி,
கரூர் துயரம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் காலை 11 மணிக்கு அவர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த சம்மனை ஏற்று சிபிஐ முன் ஆஜர் ஆவதற்காக விஜய் இன்று காலை 6 ணியளவில் தனது பனையூர் வீட்டில் இருந்து டெல்லி புறப்பட்டார். தனி விமானத்தில் விஜய் தற்போது டெல்லி சென்றடைந்தார். இந்த நிலையில், கரூர் துயரம் தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ முன்வைக்க உள்ள முக்கிய கேள்விகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
1. "நிகழ்ச்சி நடைபெறும் நாளில் இறுதி முடிவு யாருடையது?
2. கூட்டம் அதிகமாகிறது என்று தகவல் வந்தபோது நிகழ்ச்சியை தொடரச் சொன்னது யார்?
3. மேடையில் இருந்தபோது பாதுகாப்பு அதிகாரிகளுடன் நேரடி தொடர்பு இருந்ததா?
4. கூட்ட நெரிசல் ஏற்பட்ட அந்த நிமிடங்களில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
5. காயமடைந்தவர்கள் பற்றி உடனடி தகவல் கிடைத்ததா?
6. மேடையிலிருந்து பின்வாங்குங்கள், அமைதியாக இருங்கள் போன்ற அறிவுறுத்தல் கொடுக்க முயற்சி செய்தீர்களா?
7. கரூர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றிடமிருந்து முன்அனுமதி பெறப்பட்டதா?
8. கூட்ட அளவு, நேரம், பாதுகாப்பு போன்ற காவல்துறையின் நிபந்தனைகள் பின்பற்றப்பட்டதா?
9. பாதுகாப்பு பணியாளர்கள், தடுப்புகள், நுழைவு–வெளியேற்ற வழிகள் இருந்ததா?
10. கூட்டம் திடீரென அதிகரித்ததை யார் கவனித்தனர், என்ன நடவடிக்கை எடுத்தனர்?
இன்னும் சற்று நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் முன்பு விஜய் ஆஜராக உள்ளார். அவரிடம் அதிகாரிகள் மேற்கண்ட கேள்விகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்க உள்ளனர். விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோரும் டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.