மயிலம் அருகே, மொபட்டில் கணவருடன் சென்ற செவிலியரிடம் தாலி சங்கிலி பறிப்பு

மயிலம் அருகே மொபட்டில் கணவருடன் சென்ற செவிலியரின் தாலிசங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-12-11 22:00 GMT
மயிலம்,

விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டில் வசிப்பவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி பவுர்ணமி(வயது49). இவர் ஆலகிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் ஆல கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போட்டார்.

பின்னர் அவர் தனது கணவருடன் மொபட்டில் மயிலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கொண்டு இருந்தார். அவர்கள் மயிலம் ரெயில் நிலையம் அருகில் உள்ள கொடிமா கிராமத்தில் மொபட்டில் வரும் போது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவன் ஹெல்மெட் அணிந்து வந்து கொண்டு இருந்தான்.

திடீரென தட்சிணாமூர்த்தியின் மொபட் அருகே வந்த அவன், பவுர்ணமியின் கழுத்தில் இருந்த 3¼ பவுன் தாலிசங்கிலியை இழுத்து பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றான்.

இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்