நெல்லை கண்ணன் மீது போலீஸ் கமி‌‌ஷனரிடம் அ.தி.மு.க.வினர் புகார் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் நெல்லை மாநகர போலீஸ் கமி‌‌ஷனரிடம் புகார் மனு கொடுத்தனர். திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-31 23:00 GMT
நெல்லை,

அ.தி.மு.க. பாளையங்கோட்டை பகுதி செயலாளர் ஜெனி, நெல்லை அ.தி.மு.க. மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ரவி ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் நேற்று அ.தி.மு.க. நிர்வாகிகள் நெல்லை மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். போலீஸ் கமி‌‌ஷனர் தீபக் டாமோரை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மேலப்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் மத்திய, மாநில அரசுக்கு எதிராக மக்களை போராட தூண்டும் வகையிலும், இந்து, முஸ்லிம் இடையே பகைமையை வளர்த்து, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையிலும் பேசி உள்ளார்.

மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் தரக்குறைவாக பேசி உள்ளார்.

அவரது பேச்சானது பொதுமக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தி, மாநிலத்தில் கலவரத்தை தூண்டிவிடும் செயலாக உள்ளது. எனவே நெல்லை கண்ணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

திடீர் போராட்டம்

முன்னதாக கமி‌‌ஷனர் அலுவலக நுழைவு வாசல் அருகில் அ.தி.மு.க.வினர், நெல்லை கண்ணன் உருவப்படத்தை செருப்பு, துடைப்பம் கொண்டு அடித்து கண்டன கோ‌‌ஷங்கள் எழுப்பி, திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் வக்கீல்கள் வெயிலுமுத்து, பாலசுப்பிரமணியன், மோகன்ராஜ், ஜோதிமுருகன், ரமே‌‌ஷ், மாணவர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜன், மகளிர் அணி முத்துலட்சுமி, மாரியம்மாள், திவ்யா யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்