அசாம்: எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 8 யானைகள் பலி
எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் ஒரு யானை படுகாயமடைந்தது.;
கவுகாத்தி,
மிசோரம் மாநிலம் சிய்ராங் நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிய்ராங்கில் இருந்து நேற்று இரவு டெல்லிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. ரெயில் அசாம் மாநிலம் ஹொஜாய் மாவட்டம் நஹோன் பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து தண்டவாளத்தை கடக்க முயன்ற 9 யானைகள் மீது ரெயில் மோதியது. ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட 8 யானைகள் உயிரிழந்தன. ஒரு யானை படுகாயமடைந்தது.
இதையடுத்து, ரெயில் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற அதிகாரிகள் காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், உயிரிழந்த யானைகளை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.