கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு, மனுக்களை சாக்கு மூட்டையில் கட்டி சுமந்து வந்த தொழிலாளியால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு சாக்குமூட்டையில் மனுக்களை கட்டி சுமந்து வந்த தொழிலாளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-06 23:00 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா சா.செல்லம்பட்டு அருகே உள்ள நத்தக்குளம் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணி (வயது38). சமூக ஆர்வலரான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் வசிக்கும் நத்தக்குளம் பகுதியை செல்லம்பட்டு அல்லது கொசப்பாடி ஊராட்சியில் சேர்க்கக் கோரியும், டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரியும், சாதிச்சான்று கேட்டும் முதல்-அமைச்சர், கலெக்டர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு இது வரை நேரடியாகவும் தபால் மூலமாகவும் மனுக்கள் அனுப்பி வந்தார். ஆனால் இதுவரை அவர் கொடுத்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால் அவர் கடந்த 12-6-2010-ந்தேதி முதல் 31-12-2019-ந்தேதி வரை கொடுத்த 950 மனுக்களின் நகல்களை சாக்குமூட்டையில் கட்டி தலையில் வைத்து சுமந்து கொண்டு நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சங்கீதா தலைமையில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு வந்தார்.

அங்கு குறைகேட்பு கூட்டம் நடந்த அறையின் முன்பு சாக்கு மூட்டையை திறந்து 950 மனுக்களின் நகல்களை தரையில் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக போலீசார் விரைந்து வந்து அவரை சமாதானப்படுத்தினார்கள். இதனால் அவர் தரையில் கிடந்த 950 மனுக்களின் நகல்களையும் சேகரித்து மீண்டும் சாக்கு மூட்டையில் கட்டி தலையில் வைத்து சுமந்து கொண்டு திரும்பி சென்றார்.

இதேப்போல் தியாகதுருகம் அருகே வேங்கைவாடி கிராமத்தை சேர்ந்த சம்பத் (வயது60) என்பவர் கோரிக்கைகளை அட்டையில் எழுதி கழுத்தில் மாட்டிக்கொண்டு வந்து மனு கொடுத்தார். மனுவில் தனக்கு சொந்தமான வீட்டுமனையை பதிவு செய்து பட்டாமாற்றம் செய்து தர வேண்டும் என்று கூறி இருந்தார்.

சங்கராபுரம் தாலுகா பழைய சிறுவங்கூர் ஊராட்சிக்குட்பட்ட தொண்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், தொண்டனந்தல் கிராமத்தில் இருந்து பழைய சிறுவங்கூர் ஊராட்சி மன்ற அலுவலகம் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எனவே பழைய சிறுவங்கூர் ஊராட்சியை இரண்டாக பிரித்து தொண்டனந்தல் கிராமத்தை தனி ஊராட்சியாக உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்