திருச்சி வங்கி கொள்ளை வழக்கில் முருகனை 6 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி

வங்கி கொள்ளை வழக்கில் முருகனை 6 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க ஸ்ரீரங்கம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

Update: 2020-01-08 23:00 GMT
ஸ்ரீரங்கம்,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த அக்டோபர் 2-ந்தேதி சுவரில் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 28 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த கொள்ளை தொடர்பாக மணிகண்டன் என்பவரை திருவாரூர் போலீசார் முதலில் கைது செய்தனர். மணிகண்டன் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளை கும்பல் தலைவன் திருவாரூர் முருகன், அவரது அக்காள் மகன் சுரேஷ் உள்ளிட்டவர்களை திருச்சி போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையில் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்து திருச்சிக்கு கொண்டு வந்தனர்.

அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து வங்கி கொள்ளை வழக்கிலும் முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வங்கி கொள்ளை தொடர்பாக முருகனை 7 நாட்கள் தங்களது காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கவேண்டும் என கோரி கொள்ளிடம் போலீசார் ஸ்ரீரங்கம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. இதையொட்டி முருகனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஸ்ரீரங்கம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சிவகாமசுந்தரி, முருகனை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்கினார். மேலும் முருகனின் வழக்கறிஞர் அவரை தினமும் மாலை 5.15 மணி முதல் 5.30 மணி வரை சந்தித்து பேசுவதற்கும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து முருகனை போலீசார் ரகசிய இடத்திற்கு கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்