மயிலம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி

மயிலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2020-01-08 22:00 GMT
மயிலம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள செண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மனைவி வளர்மதி(வயது 45). செண்டூர்-மயிலம் சாலையில் பஜ்ஜி வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று இரவு 8 மணி அளவில் வியாபாரம் முடிந்ததும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த மாசிலாமணி மகன் ரவி(38) என்பவரிடம் வளர்மதி ‘லிப்ட்’ கேட்டார். அவரும், தனது மோட்டார் சைக்கிளில் வளர்மதியை ஏற்றிக்கொண்டார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ரவியும், வளர்மதியும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு, தாங்கள் வந்த ஜீப்பில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவியும், வளர்மதியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான வளர்மதியின் மகன் சத்தியராஜ், திண்டிவனம் ரோ‌‌ஷணை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்